“95 சதவிகித உள்ளூர் மூலப் பொருட்கள்… சத்தான உணவு”- ‘மாத்தியோசிக்கும்’ மெக்டொனால்டு (McDonald)!

காலை உணவு என்று நாம் நினைக்கையில் எப்படி இட்லி நியாபகம் வருகிறதோ, அதைப் போல உலகம் முழுவதும் பர்கர் என்று நினைத்தால் மெக்டொனால்டுதான் நியாபகம் வரும்

एनडीटीवी  |  Updated: August 30, 2019 18:40 IST

Reddit
McDonald's new plan to growth in TN

பல மாற்றங்களைச் செய்தாலும் சுவையில் எந்த சமரசமும் இருக்காது என்று சொல்கிறது மெக்டி தரப்பு.

உலக அளவில் தரமான ‘சோறு' கொடுக்கும் தொடர் உணகங்கள்தான் 21 ஆம் நூற்றாண்டில் பெரும் லாபமீட்டும் அமைப்புகளாகவும், மக்கள் மத்தியில் ‘ஸ்டார் அந்தஸ்து' பெற்ற பிரபலங்களாகவும் இருக்கின்றன. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வில் உண்டான குறிப்பிடத்தக்க மாற்றம் உள்ளிட்டவையால் வெளிநாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட உணவகங்கள், இந்தியாவில் சுலபமாக காலுன்ற முடிகின்றது. இருந்தும் சொந்த நாட்டில் இயங்குவதைப் போலவே அவர்களால் இங்கு இயங்க முடியாது. காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்றாற்போல அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. அப்படி மெக்டொனால்டு உணவகம், சில முக்கியமான மாற்றங்களை முன்னெடுத்துள்ளது. 

அதில் குறிப்பிடத்தக்க திட்டம்தான், '95 சதவிகித உள்ளூர் மூலப் பொருட்களை உணவு தயாரித்தலுக்குப் பயன்படுத்துவது'. காலை உணவு என்று நாம் நினைக்கையில் எப்படி இட்லி நியாபகம் வருகிறதோ, அதைப் போல உலகம் முழுவதும் பர்கர் என்று நினைத்தால் மெக்டொனால்டுதான் நியாபகம் வரும். இதனால் உலகில் எங்கு மெக்டி பர்கர் வாங்கி சாப்பிட்டாலும் அது ஏறத்தாழ ஒரே மாதிரியான சுவையைத் தரவைப்பதற்கு அதிக மெனக்கெடல் எடுத்துக் கொள்ளப்படும். மெக்டி பர்கரில் சேர்க்கப்படும் பல மூலப் பொருட்கள் இந்தியாவில் கிடைக்காதவை. அதனால் அந்தப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துத்தான் உணவில் சேர்க்க முடியும். இதை வைத்துப் பார்க்கும்போது, இந்த 95 சதவிகித மூலப் பொருட்களை உள் நாட்டிலேயே கொள்முதல் செய்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கலை புரிந்துகொள்ள முடியும். 

mcdonalds french fries

அது குறித்து மேலும் விளக்கினார் மெக்டொனால்டின், சப்ளை செயின் மேலாளர், விக்ரம். “மெக்டி பர்கரில் அல்லது எங்களது பெரும்பான்மை உணவில் இருக்கும் இரண்டு முக்கிய உணவுகள் லெட்யூஸ் மற்றும் உருளைக் கிழங்கு. குறிப்பாக பர்கருக்கு லெட்யூஸ் மிகவும் முக்கியம். அது இந்திய நிலப்பரப்பில் விளையக்கூடிய ஒன்றல்ல. ஆனால், எங்களின் தொடர் முயற்சியாலும், விவசாயிகளுடன் தொடர்ந்து பணி செய்து வந்த காரணத்தாலும் இமாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அதை விளையவைத்துக் காட்டினோம். அதேபோல எங்களது ஃப்ரெஞ்சு ஃப்ரைஸுக்குப் பயன்படுத்தப்படும் உருளைக் கிழங்கும் பிரத்யேக வகையைச் சேர்நதது. அந்த வகை உருளைக் கிழங்கில் ஃப்ரைஸ் செய்யப்படவில்லை என்றால், அது மெக்டி-யினுடையது போலவே இருக்காது. அதையும் வெகு நாட்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து வந்தோம். ஆனால், குஜராத்தில் இருக்கும் விவசாயிகளுடன் மிகவும் நெருக்கமாக வேலை செய்து, அதே வகையான உருளைக் கிழங்கை இந்தியாவில் விளைவித்து பயன்படுத்தி வருகிறோம்” என்றார். 

தொடர்ந்து அவர், “இன்னொன்று, இந்தியா முழுமைக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை. தமிழகத்தில் இதை முன்னெடுக்கிறோம். இங்கு நாங்கள் சோறு வகையில் உணவு அறிமுகம் செய்ததில் இருந்து, இந்திய உணவு வகையின் சிக்கன் டிக்கா வரை எல்லாம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. எனவேதான் இதையும் முன்னெடுக்கிறோம்” என்றார் நம்பிக்கையுடன்.

mcdonalds hash brown 650 fb

இப்படி பல மாற்றங்களைச் செய்தாலும் சுவையில் எந்த சமரசமும் இருக்காது என்று சொல்கிறது மெக்டி தரப்பு. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக மக்கள், ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், அதற்காக சாதாரண ப்ரெட்டில் இருந்து ஹோல்-வீட் ப்ரெட்டுக்கு மாறியது, உணவில் சோடியம் அளவில் மாற்றம் செய்தது, எண்ணெய் அளவை கணிசமாக குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்களை செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறது மெக்டி. 

-பரத்ராஜ் ர

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement