NDTV Food Desk | Updated: January 18, 2019 17:27 IST
விழாக்களின் தாய்நாடு இந்தியாதான். கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லாத நம் நாட்டில் தமிழர்களின் மிக முக்கியப் பண்டிகையாக விளங்குகிறது ‘பொங்கல்' திருவிழா. ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் தான் இந்தியாவின் பல்வேறு இடங்களில் அறுவடைத் திருவிழா வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களுக்கு அது ‘பொங்கல் விழாவாக' இருக்கிறது.
இன்று போகியுடன் ஆரம்பித்துள்ள பொங்கல் விழா, நாளை தைப் பொங்கலாகவும் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலாக கொண்டாப்படும். சூரியனுக்கு நன்றி சொல்லும் விதத்தில் கொண்டாடப்படும் இந்த விழாவில் கால் நடைகளும் வணங்கப்படுகின்றன.
தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து இடங்களிலும் இந்த விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த விழா தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகைக்குப் பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும், அதில் சுவாரஸ்யமான ஒன்று சிவனும் நந்தியும் சம்பந்தப்பட்டது. சிவன், நந்தியை உலகிற்கு அனுப்பினார் என்றும், அவர் நந்தியிடம், ‘உலக மக்களை மாதத்திற்கு ஒரு நாள் சாப்பிடச் சொல், ஆனால் தினமும் எண்ணெய்த் தேய்த்து குளிக்கச் சொல்' என்றும் கூறினாராம். ஆனால் நந்தி மக்களிடம், ‘தினமும் சாப்பிடுங்கள், மாதத்திற்கு ஒருநாள் குளிக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டதாம். இதனால் சீற்றமடைந்த சிவன், நந்தியை பூமியிலேயே இருக்கச் சொல்லி தண்டித்துவிட்டாராம். நந்தி பூமியிலேயே வாழ்ந்து மனிதர்கள் தினமும் சாப்பிட உணவுப் பொருட்களை விளைவிக்க உதவி செய்ததாம். இதனால்தான் கால்நடை மிருகங்கள் விவசாயத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது என்று அந்த இதிகாசக் கதை சொல்கிறது.
மேலும், சூரியன் வடக்கு நோக்கிய தனது பயணத்தை தை ஒன்றாம் தேதிதான் ஆரம்பிக்கும். இதையொட்டி சூரியனை வணங்கும் விதத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழா என்பது வெறுமனே, தை 1 ஆம் தேதி கொண்டாடப்படும் பண்டிகை அல்ல. அதற்கு பல நாட்களுக்கு முன்னரே கொண்டாடத்துக்கான முன்னேற்பாடுகள் செய்யப்படும். குறிப்பாக, வீட்டுக்கு புதிதாக வண்ணம் தீட்டுவது, மாயிலை தோரணம் கட்டுவது, வாசலில் வாழை மரம் வைப்பது, கோலம் போடுவது என்று கொண்டாட்ட ஏற்பாடுகள் பல நாட்கள் நடைபெறும்.
பொங்கல் என்ற உணவு தமிழர்கள் வாழும் பல பகுதிகளில் தினமும் சமைக்கப்படுகிறது. ஆனால் தையன்று சமைக்கப்படும் பொங்கல் சற்று விசேஷமானது. அன்று மட்டும் உணவு பானையிலிருந்து பொங்கும் வரை சமைக்கப்படும். இரண்டு வகைகளில் பொங்கல் சமைக்கப்படும். வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் என்ற இரு வகைகளில் இந்த உணவை சமைத்துச் சாப்பிடுகிறார்கள். வெண் பொங்கல் அரிசியைப் பிரதானமாக கொண்ட உணவு. இரண்டாவது வகை, இனிப்பாக இருக்கும் விதத்தில் செய்யப்படும். பல கோயில்களிலும் சர்க்கரைப் பொங்கல்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பால், அரிசி, வெல்லம், உலர் பழங்கள், பயிறுகள் போன்றவை சர்க்கரைப் பொங்கல் செய்ய பயன்படுத்தப்படும்.
பண்டிகைக்கென்று அல்லாமல் மிளகுப் பொங்கல் சமைப்பதும் தமிழர்கள் மத்தியில் வழக்கம். செழிப்பு மற்றும் வளர்ச்சியின் குறீயிடாகவே பானையிலிருந்து அரிசி ‘பொங்கும்' வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பானையிலிருந்து சோறு பொங்கும்போது, சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ‘பொங்கலோ பொங்கல்' என்று முழக்கமிடுவார்கள்.
Comments